அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, சரியான சமமான ஊதியம் வழங்கிட தமிழக அரசு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கடந்த பத்தாண்டிற்கும் மேலாக அரசு ஊழியர்களாக அறிவித்திட வலியுறுத்திப் போராடிவரும் அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கையைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தமிழக அரசின் செயல், நிர்வாகச் சீர்கேட்டினை வெளிப்படுத்துவதாக உள்ளது. போராடும் அங்கன்வாடி ஊழியர்களை அழைத்து தமிழக அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் உள்ள மழலையர்கள் பசியால் வாடுவதைத் தடுக்கவும், அவர்களின் உடல் மற்றும் மனநலனை பேணுவதற்காகவும் தமிழகக் கிராமங்களில் பால்வாடி மையங்கள் தொடங்கப்பட்டன. பின்னர் 1982 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் ஊட்டச்சத்து திட்டத்துடன் சேர்க்கப்பட்டு அங்கன்வாடி மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. தற்போது தமிழகத்தில் உள்ள 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் என ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அங்கன்வாடி பணிகள் மட்டுமின்றி மக்கள்தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் சரிபார்ப்பு, வாக்குச்சாவடி பணிகள், குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் சார்ந்த பணிகளையும் கடைக்கோடி மக்கள் வரை கொண்டுபோய்ச் சேர்ப்பதில் இவர்கள் பெரும்பங்கு வகித்து வருகின்றனர்.

கடந்த 35 ஆண்டுகளாகப் பணிபுரிந்தும் இவர்கள் அனைவரும் இன்றுவரை திட்டப் பணியாளர்களாகவே இருத்தப்பட்டுச் சிறப்புக் காலமுறை ஊதியமாக மாதம் 3000 முதல் 11000 மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் தினமும் 8 மணி நேரம் பணிபுரிந்தும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் முறையான ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை, ஊக்கத்தொகை ஆகியவை வழங்கப்படுவதில்லை.

2016 ஆம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் பேசிய மறைந்த முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அங்கன்வாடி ஊழியர்களை 7வது ஊதியக்குழுவில் அரசுப் பணியாளர்களாக நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார். ஆனால் அவரது வழியில் செயல்படுவதாகக் கூறும் அதிமுக அரசு இன்றுவரை அந்த உறுதிமொழியை நிறைவேற்றாமல் காற்றில் பறக்கவிட்டு அவர்களை வஞ்சித்து வருகிறது.

ஆகவே, நாட்டின் வருங்காலத் தலைமுறையான நம் மழலைச் செல்வங்களைக் கண்ணும் கருத்துமாகக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளான அரசுப் பணியாளர்களாக அறிவித்து, சரியான சமமான ஊதியம் வழங்கிட அரசாணை வெளியிடுதல்; 10 ஆண்டுகள் பணி முடித்த பணியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்குதல்; பணி காலத்தின் அடிப்படையில் அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம்; ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு ரூபாய் 10 இலட்சமும், உதவியாளர்களுக்கு 5 இலட்சமும் பணிக்கொடையாக வழங்குதல் ஆகியவற்றை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றித்தர முன்வரவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published.