ஐயா இளையராஜா மீது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதிரீதியாகத் தனிநபர் தாக்குதல் தொடுப்பதா?

இசைஞானி ஐயா இளையராஜா அவர்கள் குறித்தான காங்கிரசு கட்சியின் மூத்தத்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களது சாதிரீதியானத் தாக்குதல் அருவருப்பானதாகும். அவரது அபத்தமானப் பேச்சைக் கண்டிக்காது கைதட்டி, ஆமோதித்த ஐயா கி.வீரமணி அவர்களது செயல்பாடு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சமூக நீதி, சமத்துவம் எனப் பேசிவிட்டு, தங்களது திராவிடர் கழகத்தின் மேடையில் பேசப்படும் சாதிவெறிப்பேச்சைக் கண்டிக்கவோ, மறுக்கவோ மனமின்றி, அதனை ஏற்று அனுமதிப்பது வெட்கக்கேடானது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் குறித்து ஐயா இளையராஜா அவர்கள் அளித்த நூல் அணிந்துரையோடு முரண்படுவதற்கும், அதுகுறித்தான மாற்றுக்கருத்துகளை முன்வைப்பதற்கும் தர்க்க நியாயங்களின் துணையை நாடாது, சாதிய ஆதிக்கத்தோடு வன்மத்தை உமிழ்ந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஐயா இளையராஜா அவர்களது அரசியல் நிலைப்பாட்டிலும், ஒப்பீட்டு மதிப்பீட்டிலும் முரண்படுகிறேன். அதற்காக அவரை சாதிரீதியாக கொச்சைப்படுத்துவதையும், தனிநபர் தாக்குதல் தொடுத்து அவமதிப்பதையும் ஒருநாளும் அனுமதிக்கவோ, ஏற்கவோ முடியாது. தமிழ்ப்பேரினத்தின் ஒப்பற்ற கலை அடையாளங்களுள் ஒருவர் ஐயா இசைஞானி இளையராஜா அவர்களாவார். அவரது இசையறிவையும், கலைததிறமையையும் நாடறியும். அப்பேர்பட்டவரது திறமையையே கேள்விக்குள்ளாக்கும்விதத்தில் இழித்துரைத்து, அவர் மீது சாதியத்தாக்குதல் தொடுத்திருப்பதற்கு எனது வன்மையான எதிர்ப்பினைப் பதிவுசெய்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published.