குருதிக்கொடை அளித்து, மானுடச்சமூகத்தை நோய்களின் பிடியிலிருந்து மீட்டுக்காக்க உலக குருதிக்கொடையாளர் தினத்தில் ஒவ்வொருவரும் உறுதியேற்போம்!

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கொடை எனும் மகத்தானக் கோட்பாட்டை உலகுக்குப் போதித்தவர் தமிழ் மறையோன் வள்ளுவப்பெருந்தகையாவார். தமிழின முன்னோர்களும், மூதாதையர்களும் கொடையாளர்களாக விளங்கியிருக்கின்றனர் என்பதை வரலாறுநெடுகிலும் காணக்கிடைக்கின்ற சான்றுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். பொன்னையும், பொருளையும், நிலத்தையும், உணவையும் கொடையாகக் கொடுப்பதைக் காட்டிலும், குருதியைக் கொடையாகத் தந்து ஒரு உயிரைக் காப்பதே ஆகச்சிறந்த பெருங்கொடையாகும். அறிவியல் தொழில்நுட்பங்களும், விஞ்ஞான வளர்ச்சிகளும் மிதமிஞ்சிய அளவிலிருக்கும் தற்கால நவீன உலகில், ஒரு துளி குருதியினை எந்த அறிவியலாளராலும் உருவாக்கிட முடியாது என்பதன் மூலம் குருதிக்கொடையின் முதன்மைத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு நொடியும் உலகின் ஏதோ ஒரு மூலையில், விபத்தில் சிக்குண்டவரின் உயிரைக் காக்கவும், அறுவைச்சிகிச்சை உள்ளிட்ட மருத்துவத்துவப்பயன்பாடுகளுக்காகவும் குருதியின் தேவை இருந்துகொண்டேதான் இருக்கிறது. சிகிச்சைக்குத் தேவையான குருதிவகை கிடைக்கத் தாமதிக்கும் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் பல உயிரிழப்புகள் ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு, முன்கூட்டியே தன்னார்வலர்களிடமிருந்து உரிய மருத்துவமுறைப்படி குருதியைக் கொடையாகப் பெற்று, குருதிவகைகளுக்கு ஏற்ப தனித்தனியே பிரித்துக் குறிப்பிட்ட காலத்திற்குப் பயன்படுத்தும் வகையில் உயிர்ப்புடன் பதப்படுத்தி வைக்கும் குருதி வங்கிகள் உலகெங்கிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. பிறரது உயிர்காக்கும்பொருட்டு தன் குருதியைக் கொடையாக அளிக்கும் கொடையாளர்களின் ஈகத்தைப் போற்றும் வகையிலும், அதிகப்படியான கொடையாளர்களைத் திரட்டும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் சூன் 14 ஆம் நாளானது, உலகக் குருதிக்கொடையாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், குருதியைக் கொடையாக அளித்து மானுடப்பற்றை வளர்க்கவும், மானுடச்சமூகத்தை நோய்களின் பிடியிலிருந்து மீட்டுக்காக்கவும் ஒவ்வொரு குடிமகனும் உறுதியேற்று செயல்பட வேண்டியது பேரவசியமாகிறது.


‘ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்! மக்களை ஒன்றிணைக்கும்!’ என்ற பெருமுழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியின் சார்பாக குருதிக்கொடை பாசறை தொடங்கப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக மொத்தம் 2,04,000 அலகுகளுக்கும் மேற்பட்டகுருதியைக் கொடையாக வழங்கி, தமிழகத்திலேயே அதிகக் குருதிக்கொடை வழங்கும் அரசியல் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி திகழ்கிறது.

குருதிக்கொடைப் பாசறையின் கடந்த 2021 ஆண்டின் களஅறிக்கையின் படி, அவசரத் தேவையின் அடிப்படையில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்ட உறவுகள் 2610 அலகுகளும், சென்னை மாவட்ட உறவுகள் 2310 அலகுகளும், கோயம்புத்தூர் மாவட்ட உறவுகள் 1550 அலகுகளும் தன்னார்வலர்களாக மருத்துவமனை சென்று குருதிக்கொடை வழங்கியுள்ளனர். மேலும் இனப்படுகொலை நாளான மே-18 அன்றும் மாவீரர் நாளான நவம்பர் 27 அன்றும் வழமையாக முன்னெடுக்கப்பட்டு வரும் குருதிக்கொடை முகாம்களின் மூலமாக முறையே 1050 அலகுகள், 7480 அலகுகள் குருதியும் கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசின் சிறந்த தன்னார்வலர் விருது 11 மாவட்டங்களுக்குக் கிடைத்துள்ளது. தட்டணுக்கள் குறைபாடுள்ள 1360 உறவுகளுக்கு தொடர்ந்து குருதிக்கொடை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று தலசீமியாவால் பாதிக்கப்பட்ட 16 குழந்தைகளுக்கு தொடர்ந்து குருதிக்கொடை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறையின் அவசர குருதித் தேவைக்கான அறிவிப்புகள் மூலம் குருதிக்கொடை வழங்கி உயிர் காக்கும் உன்னத சேவையாற்றிய கட்சி சாராத நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு அவர்களது இல்லம் சென்று மரியாதை செய்யப்பட்டுள்ளது. குருதிக்கொடைப் பாசறை சார்பாக, தமிழ்நாடெங்கும் பல்வேறு நாட்களில் நடத்தப்படும் குருதிக்கொடை முகாம்களில் உணர்வெழுச்சியோடு பங்கேற்று, குருதிக்கொடை அளிக்கும் அனைத்து உறவுகளுக்கும், ‘உயிர்நேய மாண்பாளர்’ எனச் சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவித்து வருகிறது நாம் தமிழர் கட்சி. கொரோனா பெருந்தொற்றுக்காலத்தில் நாம் தமிழர் உறவுகள் வழங்கிய குருதிக்கொடையானது ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் காக்க உதவியது என்பதை எவரும் மறுக்கவியலாது.

குருதிக்கொடையின் அவசியத்தை உணர்த்தி, அதனைப் பெரும் சமூக இயக்கமாக முன்னெடுக்கவும், அதன் தேவையை அனைவரும் உணரும்படிசெய்து எல்லோரையும் பங்கேற்பாளராக மாற்றவும் தீவிரப் பரப்புரையை முன்னெடுப்போம்! விழிப்புணர்வை மேற்கொள்வோம்! மனித உயிர்களைக் குருதிக்கொடையின் மூலம் காப்போம்!

மானுட உயிர் காக்க செயல்படும் தன்னார்வலர்களுக்கும், மருத்துவப் பெருந்தகைகளுக்கும், குருதிக்கொடையாளர்களுக்கும் எனது புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published.