கெடிலம் நதியில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்தது பெருந்துயரம்! குழந்தைகளின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும்!

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்துள்ள அருங்குணம் குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுமந்தா, பிரியா, நவநீதா, சங்கீதா, மோனிஷா, திவ்யதர்ஷினி, பிரியதர்ஷினி உள்ளிட்ட ஏழு பெண்கள் கெடிலம் நதிக்கரையில் குளிப்பதற்காகச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். உயிரிழந்தவர்களில் 5 பேர் சிறுமிகள் என்பதும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் மிகுந்த வேதனை அளிக்கிறது.

கெடிலம் நதிக்கரையில் தடுப்பணை கட்ட அதன் அருகிலேயே ஒரே இடத்தில் மணல் எடுக்கப்பட்டதும், அதனால் ஏற்பட்ட ஆழமான பள்ளத்தினை எச்சரிக்க விழிப்புணர்வு பலகை வைக்காத தமிழ்நாடு பொதுப்பணித்துறையினரின் அலட்சியமுமே தற்போது ஏழு பெண்கள் உயிரிழக்க முக்கியக் காரணமாகும். எனவே இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு தலா 25 இலட்சம் ரூபாயை துயர்துடைப்பு நிதியாக அதிகரித்து வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.

தற்போதைய கோடைகாலத்தின் கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்க மலை, ஆறு, அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் அன்பிற்கினிய உறவுகள் மிகக் கவனத்துடனும், பாதுகாப்புடனும் சென்று வரவேண்டுமெனவும், குறிப்பாகத் தங்களுடன் வரும் குழந்தைகளின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டுமெனவும் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

உயிரிழந்த உறவுகளின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published.