தமிழ்த்தேசிய இனவிடுதலைப் போராட்டத்திற்குப் பேராதரவு அளித்த முன்னாள் முதல்வர் ஐயா எம்.ஜி.ஆர் அவர்களுக்கு உற்ற செயல்வீரராக இருந்து விடுதலைப்புலிகளுக்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் உறவுப்பாலமாகச் செயல்பட்ட ஐயா புலமைப்பித்தன் அவர்களது மறைவு தமிழ்த்தேசிய இனத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும்.
என்னுயிர் அண்ணன் நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், ஐயா புலமைப்பித்தன் அவர்களது இல்லத்திலேயே தங்கி ஈழவிடுதலைப் போராட்டத்திற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்ட காலங்கள் தமிழின வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.
தன் இறுதிக் காலம் வரை கொள்கை மாறாத உறுதியோடு திகழ்ந்த ஐயா புலமைப்பித்தன் அவர்கள், பத்திரிகையாளராக, திரைப்படப் பாடலாசிரியராக, பேரவைப் புலவராக, அரசியல் ஆளுமையாக, நாடறிந்த நற்றமிழ் பேச்சாளராக, என பன்முகத்தன்மை கொண்ட மாபெரும் தமிழின ஆளுமையாகத் திகழ்ந்தவர்.
ஆயிரம் நிலவே வா, நான் யார் நான் யார், ஓடி ஓடி உழைக்கணும், சிரித்து வாழ வேண்டும், போன்ற அவர் எழுதிய பல நூறு திரைப்படப் பாடல்கள் காலத்தால் அழியாத காவியத் தன்மை கொண்டவை.
ஐயா புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கம்!