திருவொற்றியூரில் சிறுமி கமலி உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது, தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுத்து, சிறுமியின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்!

திருவொற்றியூரில் சிறுமி கமலி உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது, தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுத்து, சிறுமியின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்!

திருவொற்றியூரில் சிறுமி கமலி உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, சிறுமியின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

திருவொற்றியூர், கலைஞர் நகரைச் சேர்ந்த 11 வயது சிறுமி கமலி, மின்கம்பத்திலிருந்து வெளியான மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அப்பகுதி சாலைகளில், மழைநீர் வெளியேற்றப்படாமல் தேங்கி, மின்கம்பத்திலிருந்து கசிந்த மின்சாரம் பாய்ந்ததால் தங்கை கமலி மரணித்தது பெரும் வேதனையைத் தருகிறது. பேரிழப்பைச் சந்தித்து ஆற்றா முடியாப் பெருந்துயரத்திற்குள் சிக்குண்டிருக்கும் தங்கையின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
மழைநீர் சூழ்ந்திருந்த நிலையில், மின் கசிவுகளைச் சரிசெய்யாமல் மின் இணைப்பினைக் கொடுத்த மின்சார வாரியத்தின் அலட்சியப்போக்கும், வெள்ள நீர் வடிகால்களைச் சரிவரப் பராமரிக்காமலும், தேங்கிய மழைநீரை விரைந்து வெளியேற்றாமலுமிருந்த பொதுப்பணித்துறையின் மெத்தனப்போக்குமே ஏதுமறியா அப்பாவி சிறுமியின் உயிரைப் பறித்துள்ளது. பெரும் வசதி படைத்தவர்கள் வாழும் நகரின் மையப்பகுதியில் வெள்ளப் பாதிப்புகளைச் சரிசெய்வதில் காட்டும் அக்கறையையும், வேகத்தையும், எளிய அடித்தட்டு மக்கள் வாழும் பின்தங்கியக் குடிசைப்பகுதிகளில் மேற்கொள்ளாத தமிழ்நாடு அரசின் வர்க்கப்பாகுபாடுகளுடன் கூடிய பொறுப்பற்றதனமே இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு முதன்மைக்காரணமாகிறது.

ஆகவே, புறநகர்ப்பகுதிகளில் வாழும் நடுத்தர மற்றும் ஏழை மக்களும் நம் மண்ணின் குடிமக்கள்தான் என்பதைக் கருத்திற்கொண்டு, அனைத்து மக்களின் உயிரும் சமமதிப்புடையது என்பதை இனியாவது தமிழ்நாடு அரசு உணர்ந்து, அரசுத்துறைகளில் நடைமுறையிலுள்ள வர்க்கப்பாகுபாடுகளைக் களைவதுடன், பின்தங்கியப் பகுதிகளிலும் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றுவதில் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இத்தோடு, தங்கை கமலி உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published.