துயர் பதிவு – மன்னர் குமரன் சேதுபதி

தென்தமிழ் திசையாண்ட பண்டைய பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களாக, தாய்மண் விடுதலைக்குப் போராடி வீரம் விளைவித்த இராமநாதபுரம், சிவகங்கை என்ற பெருமைமிக்க நிலப்பகுதியினை ஆண்ட தமிழ் முன்னோர்களின் வழிவந்தவருமான, பெருமதிப்பிற்குரிய மன்னர் குமரன் சேதுபதி அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

தமிழும், இசையும் வளர்த்த சான்றோர்களான சேதுபதி மன்னர்களின் பண்பாட்டுச் சிறப்பையும், இலக்கியத் தொண்டினையும் தாமும் தொடரும் விதமாக, ஐயா அவர்கள் தமது காலத்தில் இராமேசுவரம் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழகச் சபை உறுப்பினர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகச் சபை உறுப்பினர், இராமநாதபுரம் மாவட்ட கால்பந்து சங்கத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்து ஏற்ற பதவிக்கும், பிறந்த மண்ணிற்கும் பெருமை சேர்த்தவர்.

போற்றுதற்குரிய பெருந்தகை தக்கார் குமரன் சேதுபதி அவர்களின் எதிர்பாராத மறைவு இராமநாதபுரம், சிவகங்கை மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழினத்திற்குமான பேரிழப்பாகும். ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள ராணி இராஜேஷ்வரி நாச்சியார் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published.