சீமான்

நாம் தமிழர் கடந்த வந்த பாதைகளும், பதிய வைத்திருக்கும் தடங்களும்

அமைப்பு உருவான காலத்திற்கு முன்

தமிழர் தேசிய இன வரலாற்றில் ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை மாபெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. கடந்த 2008-09 காலகட்டத்தில் தாயகத்தமிழகத்தில் தனது தொப்புள்கொடி சொந்தங்களான ஈழ உறவுகளைக் காப்பாற்ற மாணவர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் எனச் சமூகத்தின் அனைத்துத்தரப்பு மக்களும் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தனர்.

ஈழப்படுகொலையைக் கண்டித்து 19-10-08 அன்று இராமேசுவரத்தில் தமிழ்த்திரையுலகம் சார்பில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் செந்தமிழன் சீமான் பேசினார். அதில் அவர் பேசியதாவது:

“ஆதியில் நம்மைப் பர்மாவில் அடித்தார்கள். நாம் ஓடிவந்தோம். பின், பம்பாயில் அடித்தார்கள்; நாம் ஓடிவந்தோம். கர்நாடகாவில் எப்போதும் நம்மை அடிக்கிறார்கள்; நாம் ஓடி வருகிறோம். நாளை முல்லை பெரியாரில் அடிப்பார்கள்; நாம் ஓடி வருவோம். உலகெங்கும் அடிமைப்பட்டு அகதியாக ஓடிவந்த நம்மினம் ஒரே ஓரிடத்தில் மட்டும்தான் மானத்தோடும், வீரத்தோடும் திருப்பி அடித்தது. அது தமிழீழத்தில் மட்டும்தான். தமிழன் எங்கு அடி வாங்கினாலும் அது உலகத்திற்கு நன்முறை. தமிழன் திருப்பி அடித்தால் அது வன்முறையா?”

இதில், இந்திய இறையாண்மைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலும், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்தும் பேசியதாக 24-10-2008 அன்று செந்தமிழன் சீமானை கைதுசெய்து சிறையிலடைத்தனர்.

மேற்கண்ட வழக்கில் பிணை பெற்று விடுதலையான செந்தமிழன் திரு. சீமான் அவர்கள் தன் இனம் அழிவதைச் சகிக்காது தொடர்ச்சியான பல போராட்டங்களிலும், போராட்டங்களிலும் பங்கேற்றார்.

அதன் தொடர்ச்சியாக ஈரோடு, கருங்கல்பாளையம் திருநகர்காலனி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதற்காகச் திரு. சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோரோடு கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட நாட்கள் சிறையிலிருந்த சீமான் அவர்களை 20-01-2009 அன்று நிபந்தனையில்லா பிணையில் சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்தது.

இந்நிலையில், ஈழத்தில் போர்ச்சூழல் இறுகியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த சூழலில் போர்நிறுத்தம் கோரி புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் சாகும்வரை பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.12-02-2009 அன்று இதில் பங்கேற்று மாணவர்களை வாழ்த்திப்பேசினார் திரு. சீமான். இதில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகச் திரு. சீமான் மீது புதுச்சேரி காவல்துறையினர் வழக்கு தொடர்ந்தனர். இதனால், முன்பிணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திரு. சீமான் தொடர்ந்த மனு மீதான விசாரணை, 26-02-2014 அன்றைக்குத் தள்ளி வைக்கப்பட்டது. 

இந்நிலையிலும், சென்னை, எம்.ஜி.ஆர் நகரில் 15-02-2009 அன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த ‘வீரத்தமிழ் மகன்’ முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் திரு. சீமான் பங்கேற்று எழுச்சியுரை நிகழ்த்தினார்.

இதற்கிடையில் பிப்ரவரி 19ஆம் தேதி காங்கிரசு மற்றும் அதிமுகச் சட்டமன்ற உறுப்பினர்கள், ‘சீமானை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?’ என்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ‘2’ நாட்களுக்குள் கைது செய்துவிடுவோம்; சீமானை கைது செய்வதற்காக 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். காவல்துறை மிகக்கடுமையாகச் செந்தமிழன் சீமான் அவர்களைத் தேடிக்கொண்டிருந்தது. சில பார்ப்பன ஏடுகள் திரு. சீமான் காவல்துறைக்குப் பயந்து ஒளிந்துகொண்டுவிட்டதாகச் செய்திகளைப் புயல்வேகத்தில் பரப்பிக்கொண்டிருந்த வேளையில் திரு. சீமான் காவல்துறைக்கு அஞ்சுகின்ற மனிதரல்ல! மாறாகத் தமிழின விடுதலையை என்ன விலை கொடுத்தேனும் வென்றெடுக்கக் காத்திருக்கிற புலி என்று தமிழ் உணர்வாளர்கள் நம்பிக்கொண்டிருந்த வேளையில் தமிழ்நாடே திரும்பிப்பார்க்கின்ற வகையில் மிகப்பெரிய ஒருவேலையைச் செய்துவிட்டுக் கைதாகலாம் என்று காத்திருந்தார் திரு. சீமான்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் 17-02-2009 அன்று போர்நிறுத்தம் கோரி திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்கம் ஒரு கூட்டம் நடத்தப்போவதாகவும், அக்கூட்டத்தில் தலைமறைவாக இருக்கிற செந்தமிழன் சீமான் கலந்துகொண்டு எழுச்சியுரை நிகழ்த்தப்போவதாகச் செய்திகள் வெளியாயின. பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அக்கூட்டத்தில் திரு. சீமான் கலந்துகொள்ள வருவதை எதிர்பார்த்து காவல்துறையினர் பெருவாரியான எண்ணிக்கையில் காத்திருந்தனர். திடீரென்று, வழக்கறிஞர் சங்கச்செயலாளர் நெல்லை சிவக்குமார் மற்றும் வழக்கறிஞர்களோடு மேடையில் தோன்றிய திரு. சீமான் வரலாறு காணாத எழுச்சிப்பேருரை ஆற்றினார். அவரது எழுச்சியுரை கேட்ட தமிழர் உள்ளம் மாபெரும் போராட்ட உணர்வைப் பெற்றது. பேசி முடித்துவிட்டு மறுநாள் காலையில்...

ஏற்கனவே, புதுச்சேரியில் பேசியதற்காக அம்மாநில காவல்துறையினர் வழக்குத் தொடுத்திருந்ததால் நெல்லை காவல்துறை ஆணையரிடம் நேரில் சரணடைந்தார் திரு. சீமான். நெல்லை காவல்துறையினர் சீமானை புதுச்சேரி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். புதுச்சேரி நீதிமன்றத்தீர்ப்பின் படி,புதுச்சேரி, காலாப்பட்டு மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டார் திரு. சீமான். நெல்லையில் பேசியபோதும் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக நெல்லை காவல்துறையினர் வழக்குத் தொடுத்ததால் திரு. சீமான் மீது தேசியப்பாதுகாப்புச்சட்டம் போடப்பட்டது. இதில் புதுவை சிறையில் 80 நாட்கள் அடைக்கப்பட்டார் திரு. சீமான். அவருக்கு நீதிமன்றத்தில் பிணை கிடைத்ததால் பிணையில் விடுவிக்கப்பட்டார். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் நெல்லை காவல்துறையினர் அவரைக் கைது செய்ததையும் சென்னை உயர்நீதிமன்றம் நீக்கம் செய்தது.

புதுச்சேரி காவல்துறையினரால் தேசியப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்கை நீக்கி, ‘சீமான்’ குற்றமற்றவர் எனப் புதுவை முதன்மை நீதிமன்றம் 27-03-2012 அன்று தீர்ப்பளித்தது

சீமான்

சீமான்

நாம் தமிழர் கட்சி

தோற்றமும், தொடக்கக் கால நிகழ்வுகளும்

நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டது முதல் இன்றுவரை, 2009 முதல் 2021 வரை பங்கெடுத்த முக்கிய நிகழ்வுகள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் இன்னபிற செய்திகளின் தொகுப்பு இங்கு அளிக்கப்படுகிறது. கிடைத்த ஆவணங்களின், செய்திகளின் அடிப்படையில் தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இவை நிகழ்வுகளின் முழு வடிவம் அல்ல. அனைத்து நிகழ்வுகளும் ஒருங்கே தொகுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் முழு வடிவத்தில் அவை வெளிவரும்.

2009ஆம் ஆண்டு

நாம் தமிழர் இயக்கம் தோற்றம்

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் நமது தொப்புள் கொடி சொந்தங்களான ஈழ உறவுகள் தமிழரின் மற்றொரு தாய்நிலமான ஈழத்தில் லட்சக்கணக்கில் கொன்றுகுவிக்கப்பட்டப்போது தாயகத்தமிழகம் தனது நாடாளுமன்றத்தேர்தலைச் சந்தித்து விட்டு அமைதியாகிப் போனது. அங்கே போர் முடிந்து லட்சக்கணக்கில் தமிழர்கள் வதைமுகாம்களில் சிக்கிக் கொண்டு தவித்தனர். இம்மக்களைக் காப்பாற்ற..உலகச் சமூகத்தின் விழிகளைத் திறக்க, செந்தமிழன் சீமான் முடிவெடுத்தார். முள்வேலி சிறைகளில் சூழப்பட்டு அடிமைகளாகச் சிக்கிக் கொண்ட ஈழத்தமிழ் உறவுகளைக் காப்பாற்றத் தொடர்ச்சியான நிகழ்வுகளை, பொதுக்கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டார் திரு. சீமான். இந்நிகழ்வுகளை ஒருங்கிணைக்க நாம் தமிழர் இயக்கம் என்ற ஒன்றினை திரு. சீமான் உருவாக்கினார்.

நாம் தமிழர் இயக்கம் மதுரை மண்டலம் சார்பில் 18-07-09 அன்று ‘முள்வேலிக்கம்பிகளை அறுத்தெறிவோம்’ என்ற தலைப்பில் மதுரையில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தினைச் திரு. சீமான் தலைமையேற்று நடத்தினார். ஆட்சியாளர்களின் கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்ற அந்நிகழ்வில் தேசியத்தலைவர் பிரபாகரன் உடையணிந்து ஆயிரக்கணக்கான இளைஞர் பட்டாளம் உணர்ச்சி முழக்கங்களோடு வீறுநடை போட்டனர். இந்நிகழ்வில் நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராகச் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார்.

அவர் பேசியதாவது:-

“சீவகாருன்யத்தைப் போதித்தவன் புத்தன். அவன் வாழ்ந்து மறைந்த பூமி இந்தியப் பெருந்தேசம். அகிம்சையை உலகுக்குப் போதித்து அகிம்சாமூர்த்தி எனப் போற்றப்பட்ட காந்தியடிகளின் தேசம், இந்தியா. உலகம் முழுக்க ஆறு மாதம், ஐந்து மாதம் ஓடோடி மானுடச்சேவை செய்த அன்னை தெரசா ஆயுள் முழுக்கச் சேவை செய்த பூமி இந்தியா. அந்தத் தேசம்தான் வறண்ட நாக்கிற்கு ஒரு சொட்டு தண்ணீரின்றி, பச்சிளங்குழந்தைகள் பாலின்றி, காயம்பட்ட புண்ணுக்கு மருந்தின்றி 3 இலட்சம் தமிழர்கள் முள்வேலி கம்பிகளுக்குள்ளே இருப்பதை வேடிக்கை பார்க்கிறது. இதுதான் இந்தியப்பெருந்தேசத்தின் மனிதநேயமா?”

நாம் தமிழர் இயக்கத்தின் இரண்டாம் நிகழ்வாக விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கக்கோரி 29-07-2009 அன்று நாம் தமிழர் இயக்கம் சார்பாகப் பேரணி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார்.

கனடா ஸ்காப்ரோவில் 25-10-2009 அன்று மாவீரர் வாரத் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய திரு. சீமான், அந்த நாட்டுக்கு எதிராகப் பேசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அங்கே கடுமையான நெருக்கடிகளுக்கும், விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டதிரு. சீமான் பிரபாகரனின் தம்பி எனக் குற்றஞ்சாட்டப்பட்டு இந்தியாவுக்குத் திருப்பியனுப்பப்பட்டார்.

2010ஆம் ஆண்டு:

‘வீரத்தமிழ்மகன்’ முத்துக்குமார் எழுச்சிப்பேரணி மற்றும் வீரவணக்கப்பொதுக்கூட்டம் 13-02-10 அன்று சேலம் போஸ் மைதானத்தில் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சி முழக்கமிட்டார்.

நாம் தமிழர் இயக்கத்தின் கொடி அறிமுக விழா 10-04-10 அன்று தஞ்சாவூரில் திலகர் திடலிலுள்ள பேரரசன் இராசராசன் அரங்கத்தில் நடந்தது.தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கொடியை அறிமுகம் செய்துவைத்தார். இதில் கட்சியின் நிகழ்வுகளைத் துவங்குவதற்கு முன் அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி கட்டாயம் எடுக்க வேண்டும்; கட்சியில் துண்டு, மாலை போடக்கூடாது; பட்டாசு வெடிக்கக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டது.

சீமான்

சீமான்

நாம் தமிழர் இயக்கம் நாம் தமிழர் கட்சியானது:

2009 ஜீலை 18ஆம் தேதி முதல் நாம் தமிழர் இயக்கமாக செயல்பட்டுக் கொண்டிருந்த அமைப்பு ஒரு மாபெரும் வெகுசன அரசியல் கட்சியாக மே 18 – 2010 ல் நாம் தமிழர் கட்சியாக தோற்றம் அடைந்தது.

நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு 18-05-10 அன்று மதுரையில் நடந்தது. விரகனூர் சுற்றுவட்ட சாலை அருகே ‘ஈகி’ முத்துக்குமார் நினைவு நுழைவு வாயிலில் மாலை 05 மணிக்கு பேரணி தொடங்கியது. தொடர்ந்து போர்க்குற்றவாளி’ ராஜபக்சே, அவருக்கு துணை நின்ற சர்வதேச சக்திகளுக்கு தண்டனை நிறைவேற்றுவதைச் சித்தரிக்கும் வகையில் மேடைநாடகம் நடத்தப்பட்டது. பின்னர், நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டதோடு, கட்சியின் முதன்மைக்கொள்கைகள், துணைக்கொள்கைகள் பேரறிவிப்பு செய்யப்பட்டது. ஒரு இலட்சம் பேர் வரை திரண்ட இந்த மாநாட்டில் இறுதியாக, தலைமை ஒருங்கினைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார்.

 

அதில் பேசியதாவது,

 

தமிழ்த்தேசிய இனத்திடம் வீரம், விவேகம், ஆற்றல், அறிவு எல்லாமிருந்தும் நாம் தோற்றதற்குக் காரணம், நமக்கான அரசியல் நம்மிடம் இல்லாததுதான். எல்லாமிருந்த நம்மிடத்தில் அரசியல் மட்டும் எம்மினத்தின் எதிரி ஜெயலலிதாவிடமும், எம்மினத்தின் துரோகி கருணாநிதியிடமும் இருந்தது. அதனால், எங்களுக்கான விடுதலை சிங்களர்களிடமிருந்தோ, பார்ப்பனர்களிடமிருந்தோ அல்ல! எங்களுக்கான முதல் விடுதலை கருணாநிதியிடமிருந்தும், ஜெயலலிதாவிடமிருந்தும்தான் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம். பாகிஸ்தானிடமிருந்து வங்காளதேசத்தைப் பிரித்துக்கொடுத்த இந்தியா, நாங்கள் சுதந்திரம் கேட்டபோது அழித்தொழிக்க ஆயுதம் கொடுத்தது ஏன்? பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் குண்டுவீசியபோது பதறித்துடித்த பாரததேசம் பக்கத்தில் ஈழத்திலே குண்டுவீசியபோது அமைதி காத்தது ஏன்? மே 18, தமிழர் இன வரலாற்றில் இருண்ட நாள், துயர நாள். அந்த நாளிலே நாம் கூடியிருப்பது, வீழ்ந்ததெல்லாம் அழுவதற்கல்ல! எழுவதற்கு எனக் காட்டுவதற்குத்தான்!! நாம் தமிழர் கட்சி என்பது மொழியையும், இனத்தையும் உயிருக்கு மேலாக நேசிக்கும் எழுச்சிமிக்க இளைஞர்களின் பாசறை.