OUR history

நாம் தமிழர் கட்சி

தேர்தல் களம்

2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத்தேர்தலில் இனத்தைக் கொன்றழித்த காங்கிரசையும், அதற்குத் துணை நின்ற திமுகவையும் வீழ்த்துவது என்ற உறுதிமொழியுடன் களத்தில் இறங்கியது நாம் தமிழர் கட்சி. குறிப்பாக ஈழத்தில் நமது தொப்புள்கொடி உறவுகளை இனப்படுகொலை செய்வதற்கு ஆயுதங்களைத் தந்து உதவிய காங்கிரசை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்துவதென்றும், பதவி, அதிகார ஆசைக்காக தமிழினம் கொத்துக்கொத்தாகக் கொல்லப்படுவதற்கு துணைநின்று துரோகம் புரிந்த திமுகவிற்கு மீண்டும் அந்தப் பதவி, அதிகாரம் கிடைக்கவிடமாட்டோம் என்ற பேரறிவிப்புடன் மக்களை நோக்கி பரப்புரை செய்யக் களத்தில் இறங்கியது. அத்தேர்தலில் திமுக – காங்கிரசு கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. திமுக எதிர்க்கட்சியாகக் கூட வரமுடியாமல் வீழ்ந்தது. 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரசு கட்சியோ செந்தமிழன் சீமான் பரப்புரை செய்த 59 தொகுதிகளில் 58 தொகுதிகளில் தோல்வியைச் சந்தித்தது. காங்கிரசு–திமுக கட்சிகள் மீதான பிம்பத்தை சீமான் முற்றாகச் சிதைத்துவிட்டார் என்ற வரலாற்று பெருஞ்செய்தியை அன்றைய ஊடகங்கள் பதிந்து கொண்டன.

2011

சட்டமன்ற பொதுத்தேர்தல்

தமிழினப்படுகொலையில் பங்காற்றி, மாநில அதிகாரத்திலிருந்த கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தமிழ் நிலத்திலிருந்து எப்படி அகற்றப்பட்டதோ, அதைப்போலவே மத்தியில் ஆண்ட காங்கிரசு அரசையும் ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றவேண்டிய வரலாற்றுத் தேவை மீதம் இருந்தது. அதோடு சேர்த்து மனிதக்குலத்திற்கே அச்சுறுத்தலாக இருக்கும் பாஜகவையும் எதிர்த்துக் களமாட வேண்டிய மிகமுக்கிய கடமையும் இருந்தது. அதற்கான போராட்டக்களத்தில் 2014ஆம் ஆண்டு இறங்கியது நாம் தமிழர் கட்சி. சமரசமின்றி இரண்டு இந்தியத் தேசிய கட்சிகளையும் எதிர்த்துக் களமாடியது. அந்தத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசு கட்சி ஒரு தொகுதியில்கூட வெல்லமுடியாமல் படுதோல்வியைச் சந்தித்தது. இனப்படுகொலைக்கு துணைபோன திமுகவும் ஒரு தொகுதியில்கூட வெல்லமுடியாமல் வீழ்ந்தது. அதோடு சேர்த்து இந்தியா முழுதும் வென்ற பாஜக கூட்டணியும் தமிழகத்தில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது.

2014

நாடாளுமன்ற பொதுத்தேர்தல்

2010ஆம் ஆண்டுக் கட்சி தொடங்கியபோது அறிவித்தபடி ஐந்தாண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கும் மண்ணுக்குமான வாழ்வாதார உரிமைகளைப் பெறுவதற்கான போராட்ட களத்தில் நின்று பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது நாம் தமிழர் கட்சி. அதன் மூலம் மக்களுக்காக உண்மையாக, உறுதியாகப் போராடும் அரசியல் கட்சி தாம்தான் என்பதைச் செயலால் நிறுவியது. 2016ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி முதன் முறையாகத் தேர்தல் களத்தில் போட்டியிட்டது. இந்திய, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் 234 தொகுதிகளிலும் தனித்துக் களமிறங்கியது. தமிழக வரலாற்றில் அதுவரை இல்லாத அளவிற்கு அதிக அளவில் பெண்களுக்கு வாய்ப்பளித்து 42 தொகுதிகளுக்கு மேல் பெண்களை வேட்பாளர்களை நிற்க வைத்தது. அதிகப் பொதுத்தொகுதிகளில் ஆதித்தமிழர்களை நிற்க வைத்து உண்மையான சமூகநீதியை நிகழ்த்திக் காட்டியதோடு மட்டுமல்லாமல், ஆண்டாண்டு காலமாக அரசியல் அதிகாரத்தில் புறக்கணிக்கப்பட்ட, மீனவர்கள், சலவைத்தொழில் செய்வோர், முடிதிருத்துவோர் உள்ளிட்ட சமுதாய மக்களுக்கும் வாய்ப்பளித்துப் புதிய அரசியல் புரட்சியைத் தொடங்கி வைத்தது. திராவிட, தேசிய கட்சிகள் செய்வதுபோல் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் கவர்ச்சிகர, வெற்று அறிவிப்புகளை வெளியிடாமல், தற்சார்பு பசுமை-தாய்மை பொருளாதாரம், நிலமும்-வளமும் சார்ந்த தொழிற்சாலைகள், பலகோடி பனைத்திட்டம், அனைவருக்கும் சரியான, சமமான கல்வி, மருத்துவம் இலவசம், தூய குடிநீர் இலவசம், உள்ளிட்ட பல்வேறு அறிவார்ந்த புரட்சிகரத் திட்டங்களை அறிவித்து, எவ்வாறு ஆட்சி செய்வோம் என்பதற்கான ஆவணத்தை வெளியிட்டு மக்களை அணுகியது நாம் தமிழர் கட்சி. 2016ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கான வெற்றி தோல்வியை நிர்ணயித்த வாக்கு இடைவெளியான 1.1 விழுக்காடு வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியா அரசியல் கட்சியாக தடம் பதித்தது நாம் தமிழர் கட்சி.

2016

சட்டமன்ற பொதுத்தேர்தல்

முனைவர் ராதாகிருட்டிணன் நகர் (ஆர்.கே. நகர்) இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக கலைக்கோட்டுதயம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இந்த இடைத்தேர்தலில் 3802 வாக்குகள் பெற்று 2.15% சதவிகிதத்துடன் நாம் தமிழர் கட்சி நான்காவது இடம் பெற்றது.

2017

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்

2019 நாடாளுமன்றத்தேர்தலில் உலக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்குச் சரிபாதி இடங்களில் பெண்களை நிறுத்தி புதியதொரு அரசியல் புரட்சியை நிகழ்த்திக் காட்டியது நாம் தமிழர் கட்சி. திராவிட, தேசிய கட்சிகளைச் சமரசமின்றி எதிர்க்கும் பெரும்போர் இத்தேர்தலிலும் தொடர்ந்தது. மற்ற கட்சிகள் எல்லாம் எந்தக் கூட்டணி, எத்தனை தொகுதி, எவ்வளவு பணம் என்று பேரம் பேசி நின்ற நாட்களில், மக்களை நம்பி தனித்துக் களம் கண்டது நாம் தமிழர் கட்சி. வாக்குக்குப் பணம் தரமாட்டோம், இலவசம் தரமாட்டோம், கொள்கையைப் விற்று கூட்டணி சேரமாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்து எவ்வித தயக்கமுமின்றித் தேர்தலைச் சந்தித்தது நாம் தமிழர் கட்சி. பணபலம், அதிகார பலம், கூட்டணி பலம், ஊடக புறக்கணிப்பு, கருத்துக்கணிப்பில் புறக்கணிப்பு, கடைசி நேரத்தில் சின்னம் மாற்றம், வாக்கு எந்திரத்தில் சின்னம் தெளிவின்மை உள்ளிட்ட பல்வேறு தடைகளையும் தாண்டி ஏறத்தாழ 17 இலட்சம் வாக்குகள் பெற்று 2016 பொதுத்தேர்தலை விட நான்கு மடங்கு வளர்ச்சி அதாவது 4% வாக்குகள் பெற்று மாற்றத்திற்கான தனித்துவமிக்க அரசியல் ஆற்றலாக உருவெடுத்தது நாம் தமிழர் கட்சி.

2019

நாடாளுமன்ற பொதுத்தேர்தல்

கடந்த தேர்தல்களைப்போல் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டது நாம் தமிழர் கட்சி. சுமார் 12 விழுக்காடு வாக்குகளை பெற்றது நாம் தமிழர் கட்சி. இந்த தேர்தலில் கன்னியாகுமரியில் உள்ள இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11ஆம் எண் வார்டு உறுப்பினராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுனில் உட்பட நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்களாகவும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஊராட்சித் தலைவர்களாகவும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

2020

உள்ளாட்சித் தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டுயிட்டது. மார்ச் 7, 2021 அன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். சென்னை திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆண் வேட்பாளர்கள் 117 பேர், பெண் வேட்பாளர்கள் 117 பேர் என மொத்தம் 234 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். புதுச்சேரியிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். 14 ஆண்; 14 பெண் வேட்பாளர்கள் என 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பணபலம், அதிகார பலம், கூட்டணி பலம், ஊடக புறக்கணிப்பு, கருத்துக்கணிப்பில் புறக்கணிப்பு, கடைசி நேரத்தில் உள்ளிட்ட பல்வேறு தடைகளையும் தாண்டி ஏறத்தாழ 32 இலட்சம் வாக்குகள் அதாவது 7% வாக்குகள் பெற்று 2016 பொதுத்தேர்தலை விட ஏழு மடங்கு வளர்ச்சி பெற்று மாற்றத்திற்கான தனித்துவமிக்க அரசியல் ஆற்றலாக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது நாம் தமிழர் கட்சி!

2021

சட்டமன்ற பொதுத்தேர்தல்