திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியத்திலுள்ள கல்லரப்பாடி ஊராட்சி மன்றத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தம்பி ஏழுமலை அவர்களை ஆதிக்கச்சாதி மனப்பான்மையோடு ஊராட்சி மன்றச்செயலாளர் பணிசெய்யவிடாமல் தொடர்ந்து இடையூறு செய்துவருகிற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
தம்பி ஏழுமலை ஆதித்தமிழர் என்பதாலேயே, அவர் மீது ஏவப்படும் இத்தகைய அடக்குமுறைகளும், சாதி ஆணவப்போக்கும் வன்மையான கண்டனத்திற்குரியது. இவ்விவகாரத்தில் ஊராட்சி மன்றச்செயலாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்தது மட்டும் போதுமானதல்ல.
தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு ஊராட்சி மன்றச்செயலாளர் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், சனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவரான தம்பி ஏழுமலை சுதந்திரமாக மக்கள் பணியாற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.