நளினி, ரவிச்சந்திரன் விடுதலைக்கு எதிரான திமுக அரசின் நீதிமன்ற நிலைப்பாடு, ஏற்கவே முடியாத பச்சைத்துரோகம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கினுள் சிக்குண்டு இருக்கும் அக்கா நளினி மற்றும் தம்பி ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் தங்களை விடுதலை செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தமிழக அரசு முன்வைத்த வாதமானது பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தருகிறது. தம்பி பேரறிவாளன் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றிபெற்ற வழக்கில், ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவரென்றும், இவ்விடுதலை விவகாரத்தில் குடியரசுத்தலைவரோ, ஒன்றிய அரசோ முடிவெடுக்க எவ்வித அதிகாரமுமில்லையென்றும் தீர்ப்பு வழங்கி, உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கும் நிலையில், அத்தீர்ப்புக்கு முரணாகவும், விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழக அரசு வாதிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

 

இவ்விடுதலை விவகாரத்தில், ‘குடியரசுத்தலைவருக்கு சட்டமன்றத் தீர்மானத்தை அனுப்பி வைத்தது தவறான நடவடிக்கை’ எனக்கூறி, திமுக அரசின் தவறான நகர்வை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருக்கும் நிலையில், மீண்டும் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் குறித்து திமுக அரசு வாதிடுவது எதற்காக? ஆளுநர் ஒப்புதல் தராது இழுத்தடிக்கும் சனநாயகப்படுகொலையை வாதிட வேண்டிய நேரத்தில் ஆளுநர் தரப்புக்குச் சாதகமாக வாதம் வைப்பது யாரை திருப்திப்படுத்த? இதுதான் மாநிலத்தன்னாட்சியை மீட்கும் அண்ணாவின் வழியிலான திராவிட மாடல் ஆட்சியா? வெட்கக்கேடு!

 

திமுக அரசு முன்வைத்த வாதங்களில் குறிப்பிடத்தகுந்தவையாக, ‘அமைச்சரவை தீர்மானம் ஆளுநர் முன் நிலுவையில் இருந்தபோதும், தற்போது குடியரசுத்தலைவரின் முன்பு இருக்கும்போதும், தீர்மானத்தின்படி மனுதாரர்களை விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டால், அது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்துக்கு அப்பால் சென்றுவிடும்’ எனக்கூறி, விடுதலையை உயர் நீதிமன்றம் தந்துவிடவே கூடாது என வாதிட்டிருப்பது பெரும் மோசடித்தனமில்லையா? அரசுத்தரப்பு வழக்கறிஞர் யாருக்காக வாதாடுகிறார்? ஆறு பேரின் விடுதலைக்காகவா? இல்லை! ஆளுநர் தரப்பை நியாயப்படுத்தி, விடுதலையைத் தடுக்கவா? தமிழகக் காவல்துறையை ஆளுநர்தான் கட்டுப்படுத்தி வருகிறார் எனக்கூறப்படும் நிலையில், அரசுத்தரப்பு வழக்கறிஞர்களையும் அவர்தான் இயக்கி வருகிறாரா? மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களது கட்டுப்பாட்டில் இந்த ஆட்சியும், அதிகாரமும் இருக்கிறதா? இல்லை! பொம்மை முதல்வராக ஸ்டாலின் அமர்ந்திருக்க ஆளுநர் ஆட்சி செய்கிறாரா? என்ன கேலிக்கூத்து இது? எஞ்சிய ஆறுபேரின் விடுதலைக்காக சட்ட நிபுணர்களோடு ஆலோசனை செய்து, விடுதலைக்கான முன்நகர்வுகளை விரைந்து முன்னெடுப்போமென ஒருபுறம் அறிவித்துவிட்டு, மறுபுறம், அதற்கு முற்றிலும் நேர்மாறாக விடுதலைக்கே முட்டுக்கட்டை இடும் விதமாக திமுக அரசு முன்வைத்திருக்கும் வாதங்களும், அக்கா நளினியைக் குற்றப்படுத்தி, எக்காரணம் கொண்டும் அவரை விடுதலை செய்துவிடவே கூடாது என உயர் நீதிமன்றத்தில் எடுத்துள்ள நிலைப்பாடுகளும் ஏற்கவே முடியாத பச்சைத்துரோகமாகும்.

 

161வது சட்டப்பிரிவின்படி, மாநிலச்சட்டமன்றம் தீர்மானம் இயற்றும் விவகாரத்தில், தம்பி பேரறிவாளன் சட்டப்போராட்டம் நடத்திப் பெற்ற தீர்ப்பினால், மாநிலத்தின் தன்னுரிமை நிலைநாட்டப்பட்டு, ஆறு பேரின் விடுதலைக்கான கதவுகள் சட்டப்படி திறக்கப்பட்டு இருக்கும் வேளையில், தீர்மானத்துக்கான ஒப்புதலைப் பெற ஆளுநருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய தமிழக அரசு, மாநிலத்தின் தன்னுரிமையைப் பறிகொடுக்கும் விதத்தில் உயர் நீதிமன்றத்தில் வாதாடியிருப்பது வெட்கக்கேடானது. தம்பி பேரறிவாளன் தனது கூர்மதியாலும், சட்டஅறிவாலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்காடி, தனக்குத் தானே பெற்றுக்கொண்ட விடுதலையை, தங்களால் மட்டும்தான் சாத்தியப்பட்டதென சுயதம்பட்டம் அடித்துக்கொண்ட திமுக அரசின் உண்மை முகம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. பேச்சளவில், ‘விடுதலையைப் பெற்றுத்தருவோம்’ என வாக்குறுதி அளித்துவிட்டு, செயல்பாட்டளவில் விடுதலைக்கு குந்தகம் விளைவிக்கும் வேலையை உயர்நீதிமன்றத்திலேயே அரங்கேற்றியிருப்பதன் மூலம் திமுக அரசின் இரட்டை வேடமும், கபட நாடகமும் முழுமையாக அம்பலமாகியிருக்கிறது. திமுக அரசு செய்திருக்கும் இக்கொடுந்துரோகத்துக்கு எனது வன்மையான எதிர்ப்பினைப் பதிவுசெய்கிறேன்.

 

ஆறுபேரின் விடுதலைக்கான ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகளையும், உரிய சட்டநகர்வுகளையும் திமுக அரசு செய்யுமென்றால், விடுதலைக்கான செயல்பாடுகளில் நாம் தமிழர் கட்சி முழுமையாகத் துணைநின்று, தனது தார்மீக ஆதரவினை வழங்கும். மாறாக, மறுபடியும் வேடமிட்டு தனது துரோகங்களை திமுக அரசு இனியும் தொடருமானால், தமிழகமெங்கும் விடுதலைக்கான பெரும் மக்கள்திரள் போராட்டங்களை முன்னெடுத்து, மக்கள் மத்தியில் திமுக அரசின் கோர முகத்தை முழுவதுமாக அம்பலப்படுத்துவோம் எனப் பேரறிவிப்பு செய்கிறேன்.

 

ஆகவே, இனிமேலாவது திமுக அரசு தனது தவறுகளைத் திருத்திக்கொண்டு, மாநிலச்சட்டமன்றத்தின் தீர்மானத்துக்கே மதிப்பெனக் கொடுக்கப்பட்டிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வழிகாட்டலைக் கொண்டு, ஆளுநருக்கு நெருக்கடி கொடுத்து, ஆறு பேரது விடுதலையைச் சாத்தியப்படுத்த முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

 

 

– செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published.