விருதுநகரில் கோரச்செயலில் ஈடுபட்டப் பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்!

விருதுநகரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை மிரட்டி, கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட கொடுஞ்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். அண்மைக்காலத்தில் பெண்களுக்கெதிராகத் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வரும் பாலியல் வன்முறைகளும், அத்துமீறல்களும் பெண் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தானப் பெருங்கவலையைத் தருகின்றன. அத்தங்கைக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கு எனது கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவுசெய்கிறேன். மனிதத்தன்மையே துளியுமற்று, இதுபோன்ற ஈவிரக்கமற்ற கோரச்செயல்களில் ஈடுபடுவர்கள் எவராயினும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது அரசின் பொறுப்பும், கடமையுமாகும்.

ஆகவே, இவ்விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட பாலியல் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனையை உறுதிப்படுத்த தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளை சமரசமற்றுச் செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட அத்தங்கைக்கு உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் சிகிச்சையளித்து, அவர் இப்பாதிப்பிலிருந்து மீண்டெழுந்து வருவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து, கைதூக்கிவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published.