நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களுக்கு பணியாணை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து நீண்ட காலமாகப் பணியமர்த்தப்படாமல் காத்திருக்கும் தமிழக இளைஞர்களுக்கு பணியாணை வழங்காமல் இழுத்தடிக்கும் நெய்வேலி நிர்வாகத்தின் செயல் வன்மையான கண்டத்திற்குரியது. உடனடியாக பணியானை வழங்க வேண்டுமென்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து பயிற்சி முடித்த இளைஞர்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

பெருந்தமிழர் ஜம்புலிங்கனாரின் அருங்கொடையாலும், பெருந்தலைவர் காமராசரின் சீரிய முயற்சியாலும் தென்மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்கும் வகையில் கடந்த 1956 ஆம் ஆண்டு தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், மின்சாரத்தேவையை நிறைவேற்றுவதற்காகவும் தமிழகத்தின் வளத்தை மூலதனமாகக்கொண்டு தமிழர்களின் கடுமையான உழைப்பாலும், ஈடு இணையற்ற தியாகத்தாலும் உருவானதே நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்.

5000க்கும் மேற்பட்ட மேற்பார்வைப் பொறியாளர்களும், 12000க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களும், 13000க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களும் வேலைசெய்து வரும் நிலையில், இந்நிறுவனத்தைத் தொடங்குவதற்காக தங்கள் சொந்த நிலங்களை முழுவதுமாக விட்டுக்கொடுத்த நெய்வேலியைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வந்த பூர்வகுடித் தமிழர்களின் நிலை மட்டும் பரிதாபகரமாகவே உள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

தற்போது நிலக்கரி நிறுவனத்தில் தமிழ்நாட்டு மக்கள் பெரும்பான்மையோர் அடிமாட்டுக்கூலிகளாக வேலைசெய்யக்கூடிய அவலநிலை நிலவுகிறது. அந்தளவுக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் மேலோங்கி, அவர்கள் அதிகாரம் செலுத்துகின்ற இடமாக மாறியுள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் தமிழர் அல்லாதவர்களே நியமிக்கப்பட்டு மண்ணின் மைந்தர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வரும் சூழல் நிலவுவதும் கண்கூடாகத் தெரிகிறது.

ஒப்பந்தப்படி நிலம் வழங்கிய குடும்பங்களின் உறவுகளுக்கு இன்றளவும் பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யாமலும், நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்குப் பணி வழங்கப்படாமலும் திட்டமிட்டுப் புறக்கணிக்கும் நெய்வேலி நிர்வாகத்தின் செயல்பாடானது தமிழ் மக்களுக்கு செய்யப்படும் பச்சைத்துரோகமாகும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே கோரிக்கைகளை முன்வைத்து பயிற்சி முடித்த இளைஞர்கள் போராட்டங்களை முன்னெடுத்தபோது நாம் தமிழர் கட்சி அப்போராட்டங்களை ஆதரித்ததுடன், பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்து துணைநின்றது. அதன்பின் மாவட்ட காவல்துறை முன்னிலையில் மாவட்ட நிர்வாகமும், நெய்வேலி நிறுவனத்தின் நிர்வாகமும் விரைவில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்திருந்த நிலையில் இன்று வரை வேலை வழங்கப்படவில்லை என்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

ஆகவே, தற்போது மீண்டும் இளைஞர்கள் போராடும் நிலையில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளைத் தன்னகத்தே வைத்துள்ள தமிழ்நாடு அரசு அவர்களை கைது செய்வது ஏற்றுகொள்ளவே முடியாத செயல். உடனடியாக அவர்களை விடுதலை செய்யவேண்டும் அத்தோடு இப்பிரச்சினையில் தலையிட்டு நெய்வேலி நிறுவனத்திடமும், ஒன்றிய அரசிடமும் பேசி தொழிற் பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாக நிரந்தரப் பணி வழங்க உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published.